புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியை கொலை செய்த இரண்டு கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரவுடி வெல்டிங் குமார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்தார். அப்போது சிறையின் உள்ளே 8 கைதிகளால் அவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக புழல் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறை கண்காணிப்பாளர் புகார் அளித்தார். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
10 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இன்று நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதலாவது மற்றும் 3-வது குற்றவாளிகளான அன்பு மற்றும் கார்மேகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் இருவருக்கும் தலா 1000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். 2-வது குற்றவாளி ராஜா ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில், சுந்தரம், கார்த்திக், கதிர்வேல், பழனி, ரமேஷ் ஆகிய 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.