இரு தரப்பினரிடையே மோதல் PT
தமிழ்நாடு

ராமநாதபுரம் | கலவரமான ஏல நிகழ்வு.. இரு தரப்பினரிடையே அடிதடி மோதல்.. போலீசார் மீதும் தாக்குதல்!

முதுகுளத்தூரில் வார சந்தையை ஏலம் எடுப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், மோதலில் போலீசார் ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் வாரச்சந்தையில் கட்டணம் வசூலிப்பதற்கு ஏலம் எடுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. பிரச்னை கைக்கலப்பாக மாறிய நிலையில் இரண்டு தரப்பினரும் நாற்காலிகளை கொண்டு தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் போலீசார் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமாக வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க இன்று ஏலமானது முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இரு தரப்பினர் கலந்துகொண்டு ஏலம் கேட்டனர். இரண்டு தரப்பினர்களும் போட்டி போட்டுக்கொண்டு 20 லட்சத்திற்கு மேல் ஏலம் கேட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி பேரூராட்சி அலுவலகத்திலேயே மாறி மாறி சேர்களை கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியுல் இருந்த போலீசார் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்ற போதும் இருதரப்பினரும் தொடர்ந்து மோதிக்கொண்டதால் போலீசர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.