தமிழ்நாடு

‘ஷேர் ஆட்டோ ஓட்டுநர் போல் நடித்து கொள்ளை’ - காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

‘ஷேர் ஆட்டோ ஓட்டுநர் போல் நடித்து கொள்ளை’ - காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா

webteam

சென்னையில் ஷேர் ஆட்டோ ஓட்டுவது போல சென்று, பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை - வளசரவாக்கம், வேலன் நகரில் விஜயா என்பவரது வீட்டிலும், ஆழ்வார்திருநகரில் ரீக‌ன் என்பவரது வீட்டிலும் ‌யாரும் இல்லாதபோது, பூட்டு உடைக்கப்பட்டு மொத்தம் 36 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பூட்டிக்கிடக்கும் வீடுகளைக் குறிவைத்து அடுத்தடுத்து இதுபோன்ற கொள்ளைகள் அரங்கேறியதால், வளசரவாக்கம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். 

கொள்ளை நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஷேர் ஆட்டோ ஓட்டி ‌வரும் நபர், காவல்துறையினரின் பார்வையில் விழுந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கிச்செல்லும் அவர், பிறகு பிளாஸ்டிக் பையில் ஏதையோ கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சந்தேகமுற்ற காவல்துறையினர், ஷேர் ஆட்டோவின் பதிவெண்ணைக்கொண்டு விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்தனர். 

விசாரணையில், ஆள் இல்லாமல் பூட்டிக்கிடக்கும் வீடுகளைக் குறிவைத்து பூட்டை உடைத்து திருடி, அதன் மூலம் முதல் தவணையை கட்டி ஷேர் ஆட்டோ வாங்கியதாக அவர் கூறியுள்ளார். பிறகு ஷேர் ஆட்டோவில் சவாரி செல்வது போல குடியிருப்புப் பகுதிகளில் நோட்டமிட்டு, பூட்டிக்கிடக்கும் வீடுகளை அடையாளம் கண்டு திருடி வந்ததாக கார்த்திக் ஒப்புக்கொண்டுள்ளார். 

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஷேர் ஆட்டோவில் சென்றதாகவும், திருடிய நகை பணத்தை, பிளாஸ்டிக் பையில் வைத்து கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, கார்த்திக்கிடமிருந்து 36 சவரன் நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமல் புத்திசாலித்தனமாக ஷேர் ஆட்டோவில் சென்று திருடிய நபரை, 'மேலே இருந்த சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்துள்ளது.