நாமக்கல் அடுத்த புதுப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் சடலமாக கிடப்பதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மோகனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்த நபர், நாமக்கல் திருவள்ளுவர் காலனியில் வசித்து வந்த ரமேஷ் (45) என்பதும், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய நிலையில், விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை காட்டுப்புத்தூரில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டி அருகே வந்தபோது சாலையை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரவு நேரம் மழை பெய்ததால் விபத்து பற்றி யாருக்கும் தெரியாத நிலையில், இன்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் தான் இதனைக் கண்டு காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் முறையாக அறிவிப்பு தடுப்பு பலகைகளை வைக்காமல் பணிகளை செய்வதாகவும் முறையாக அறிவித்திருந்தால் இம்மாதிரியான விபத்துக்களை தவிர்த்திருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.