சென்னையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஆங்கில ஊடக செய்தியாளரை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, சின்னமலை அருகே டீக்கடையில் பணம் கொடுக்காமல் கண்ணாடியை உடைத்து தகராற்றில் ஈடுபட்ட நபரை, செய்தியாளர் பிரமோத் தனது செல்போனில் படமெடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தாக்குதல் நடத்தியதில் செய்தியாளரின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதைத் தடுக்க மற்ற செய்தியாளர்கள் முயன்றபோது அவர்களை தகாத வார்த்தைகளால் பேசிய அந்நபர், மீண்டும் தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் வந்த காவல்துறையினர் அந்நபரை கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் சைதாப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்பாபு என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென துணை ஆணையர் சசாங்க் சாய் உறுதியளித்துள்ளார்.