உயிரிழந்த மோகன் உடலை சுமந்து சென்ற கட்சி நிர்வாகிகள்
உயிரிழந்த மோகன் உடலை சுமந்து சென்ற கட்சி நிர்வாகிகள் PT WEP
தமிழ்நாடு

விஜயகாந்த் உயிரிழந்த துக்கம் தாளாமல் மாரடைப்பால் உயிரிழந்த தொண்டர் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

PT WEB

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நேற்று காலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் உடலுக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்றும், தீவுத்திடலில் இன்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் , திரைபிரபலங்கள் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத்தினர், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மோகன்

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை பகுதியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் சார்பில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தக் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அங்குச் சென்று விஜய்காந்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அப்போது தேமுதிக 15வது வார்டு துணை செயலாளரும், கட்சி நிர்வாகி மோகன்(52) என்பவர் அவரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்குச் சென்ற மோகன் சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவருடைய குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிகிச்சைக்காக நாமகிரிப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவருடைய உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாமகிரிப்பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியைக் கேட்டு துக்கம் தாங்க முடியாமல் கட்சி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.