தமிழ்நாடு

‘ரத்தம் வழிந்தும் ஒரு ஊசி கூட போடாதது ஏன்?’ - சாத்தான்குளம் புதிய வீடியோ

webteam

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னீக்ஸ் மற்றும் ஜெயராஜ் நண்பர்கள் டிஎஸ்பி பிரதாபனிடம் முறையிடும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். தந்தையும், மகனுமான இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே வழக்கு விசாரணையை சிபிஐ தரப்புக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே சாத்தான்குளம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐபிஎஸ் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விரைவாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்த, விசாரணை செய்யும் நிறுவனத்திடம் பரிந்துரை செய்வோம் என தெரிவித்தது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் பென்னீக்ஸ் மற்றும் ஜெயராஜ் இறந்த செய்தியை அறிந்து அவரது நண்பர்களும் வழக்கறிஞர்களும் சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபனிடம் சரிமாரியாக கேள்வி எழும்பும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் அதில், “காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்?, 5 முறை ஆடை அதாவது லுங்கியை மாற்றும் அளவுக்கு ரத்தம் வந்த நிலையில் ஒரு ஊசிக் கூட போடாதது ஏன்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

மேற்கொண்டு காவல்நிலையத்திற்கு வரும் அனைவருக்கும் இதேநிலை வராது என்பதற்கு என்ன நிச்சயம்? ஜூலை 22 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 10.30 மணி வரையிலான சிசிடிவி காட்சிகள் எங்கே? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தக் காட்சிகள் தற்சயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, சாத்தான்குளம் தந்தை மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் ஆய்வு தொடங்கியுள்ளனர். சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு பிறகே காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜெயராஜ்-பென்னிக்ஸை பரிசோதனை செய்து சிறையில் அடைக்க தகுதி சான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜராகியுள்ளார். 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜர் ஆனார்.