ராஜேஸ்வரி pt desk
தமிழ்நாடு

சிவகாசி: நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழப்பு

சிவகாசி அருகே செப்டிக் டேங்க் அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் மழைநீர் நிரம்பியதால் தவறி விழுந்த சிறுவனுடன், அவனை காப்பாற்ற முயன்ற தாயும் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் கக்கா காலனியைச் சேர்ந்தவர் கணேசன் (36). இவரது மனைவி ராஜேஸ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி, தனது மகன் தர்ஷனுடன் (5) கடந்த இரு ஆண்டுகளாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தர்ஷன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டிய பள்ளம்

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (58) என்பவர் தனது வீட்டுக்கு அருகே செப்டிக் டேங்க் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி வைத்திருந்தார். கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அந்தப் பள்ளம் முழுவதிலும் மழை நீர் நிரம்பி இருந்தது. இதையடுத்து வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மகனை காணவில்லை என தேடிவந்த ராஜேஸ்வரி, நீரில் மகன் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அவனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.