கோவையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் அழகுநிலையம் கோவை வாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
ஹோட்டலுக்கு போய்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. ‘டயல் ஃபிரீ’ நம்பரை அழுத்தி ஆர்டர் செய்தால் போதும் அடுத்த செகண்ட் வீட்டில் ஒரு விருந்தையே ஏற்பாடு செய்துவிடலாம். அதற்காகவே பல ஆப்ஸ் வந்துவிட்டன. மருந்துக்கடைக்கு போய்தான் மருந்து வாங்கி வர வேண்டுமா என்ன? கூப்பிட்ட உடன் வேண்டிய மருந்தை வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிட்டு போகிறார்கள் பல சர்வீஸ் பாய்கள். அந்தளவுக்கு ‘ப்ரீ டெலிவரி’ மூலம் மக்களை சொகுசாக வாழ பழக்கி வைத்திருக்கிறது இன்றைய தொழில் நுட்பம்.
தற்போது இந்த வரிசையில் அழகு நிலையம் ஒன்றும் இணைந்துள்ளது. முதல்முறையாக கோவையில், நடமாடும் அழகு நிலையத்தை உருவாக்கி உள்ளார் ஸ்ரீதேவி. Q3 சலூன் என்ற பெயரில் இந்த அழகு நிலைய வாகனம் கோவை முழுவதும் வலம் வருகிறது. வீட்டுக்கே வந்து இவர்கள் சேவை செய்வதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேரம் மிச்சம். அலைச்சல் இல்லை. பாதுக்காப்பும் உத்திரவாதம். எனவே இந்தச் சேவையை மக்கள் அதிகம் ஆதரிக்க தொடங்கியுள்ளனர்.
சாதாரண அழகுநிலையத்திலுள்ள அனைத்து நவீன வசதிகளும் இதில் உள்ளது. இதனால் பலரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக கல்யாண வீடுகளுக்கு இந்த வாகனம் அதிகம் பயன் தரக் கூடியதாக இருக்கிறது. பொதுவாக எல்லா அழகுநிலையத்திலும் வசூலிக்கப்படும் கட்டணத்தை போலவே இதிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.