நாகர்கோவில் அருகே பொம்மை துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் என்னுமிடத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர் லாரி ஓட்டுநரை கடுமையாக தாக்கினார். இதனைக்கண்ட பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சாமர்த்தியமாக மடக்கிப்பிடித்து துப்பாக்கியை பறித்தனர்.
இதன் பின் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபரின் பெயர் டேவிட் என்பதும், வெட்டுரணிமடத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விதவிதமான கத்திகள், சிறிய வகை துப்பாக்கி ஆகியவை இருந்தன. இதனையடுத்து டேவிட்டை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் டேவிட் வைத்திருந்தது துப்பாக்கி அல்ல, துப்பாக்கி வடிவிலான லைட்டர் என்பது தெரியவந்தது. ஆனால் மற்றவை அனைத்தும் உண்மையான ஆயுதங்கள் என தெரியவந்தது. காவல்துறையினர் தொடர்ந்து அவரை விசாரித்து வருகின்றனர்.