தமிழ்நாடு

தெரு நாய்களை பெற்ற குழந்தைகள் போல் பராமரிக்கும் நேசமிகு மனிதர்..!

தெரு நாய்களை பெற்ற குழந்தைகள் போல் பராமரிக்கும் நேசமிகு மனிதர்..!

webteam

இன்றைய காலச் சூழலில் பெற்றோரையே, வயதான காலத்தில் பராமரிக்க மனமில்லாத மனிதர்கள் மத்தியில் தெரு நாய்களை குழந்தைகளை போல் பராமரித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர். அவர் யார்? எப்படி வந்தது இந்தப் பழக்கம்?

அவரைத் தேடி போன நம்மிடம் எடுத்த எடுப்பிலேயே ‘மனித நாகரீகம் தொடங்கிய காலம் முதல் மனிதர்களுடைய முதல் நண்பன் நாய்கள் தான். இன்று அந்த முதல் நண்பனையே எதிரியாக நினைக்கிறோம்’ என்கிறார் தெரு நாய்களை பராமரித்து வரும் கே.பி.மாரிக்குமார். மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த இவர், எம்.ஏ ஆங்கிலம் படித்துவிட்டு எல்.ஐ.சியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அந்தப் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தற்போது ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். 

சிறு வயசு முதலே மாரிக்குமாருக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அந்த நேசம் ஒரு கட்டத்தில் தெரு நாய்கள் மீது திரும்பி உள்ளது. அதன்பின் சாலைகளில் செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு கிடக்கும் நாய்களையும் நோய்வாய்ப்பட்டு உயிருக்குப் போராடும் தெருநாய்களை மீட்டு வீட்டில் வைத்து பராமரிக்க தொடங்கி உள்ளார். 

ஒரு கட்டத்திற்குப் பின்பு தெருநாய்கள் மீதான இவரது இந்த நேசத்தை அக்கம் பக்கத்தினர் தொந்தரவாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆகவே திருமணம் செய்தால் தனது குடும்பத்தினருக்கும் இதேபோல் தொந்தரவாக இருக்கும் என நினைத்து திருமணமே செய்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்.  மாரிசாமி இதுவரை 250 க்கும் மேற்பட்ட தெருநாய்களை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளார். 

மீட்டெடுத்த அனைத்து தெருநாய்களையும் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து வளர்த்து வருகின்றார். இது குறித்து மாரிக்குமார், “மாதம் ஒன்றுக்கு தெருநாய்களின் உணவு மற்றும் மருத்துவத்திற்காக மட்டும் ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்கிறேன். அரசு உள்ளிட்ட இடங்களில் பணிகள் தேடி வந்தாலும் இதற்காக அவற்றை புறம் தள்ளிவிடுகிறேன். நமது மக்கள் மேலைநாட்டு நாய்கள் குரைத்தால் அதை சங்கீதமாக பார்க்கிறார்கள். தெரு நாய்கள் குரைப்பதை ஒரு தொந்தரவாக நினைக்கிறார்கள். நாய் என்றால் குரைக்கத்தானே செய்யும். அதன் மொழியே அதுதானே. மனிதர்களின் மரணத்திற்கு ஆயிரத்து எட்டு காரணங்கள் உள்ளன. அதில், ஒன்றுதான் நாய் கடிப்பதும்” என்கிறார்.