தமிழ்நாடு

வெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு

webteam

கிருஷ்ணகிரியில் வெற்றிலை வியாபார பெண்ணிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸ் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை கேட் அருகே வெற்றிலை கடை நடத்தி வருபவர் மீனா. இவரிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி, வெற்றிலை அதிகமாக தேவைப்படுவதாகவும், விலையை சற்று குறைத்து தரவேண்டுமென கேட்டுள்ளார். 

அதற்காக முன்பணமாக 500 ரூபாவை வைத்துக்கொள்ளுங்கள் என மீனாவிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மீனா மீதி சில்லரை 1500 ரூபாயை கொடுத்துள்ளார். பின்னர் 8 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை தேவைப்படுவதாக கூறி நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதற்கும் சில்லரை வாங்கியுள்ளார். 

சில்லரையை பெற்றுக்கொண்ட மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார். வெளிச்சத்தில் 2 ஆயிரம் ரூபாயை பார்த்தபோது கொடுக்கப்பட்ட ஐந்தும் கலர் ஜெராக்ஸ் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா வருத்தத்துடன், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த காவலர்கள் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.