திண்டுக்கல் ஆட்சியர் குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு வந்த நபர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் நத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்குச் சொந்தமாக அதே பகுதியில் 95 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆண்டியப்பன், போஸ், செல்வம் ஆகிய மூன்று பேர் போலி ஆவணம் தயாரித்து பட்டா பெற்று, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி காவல்துறையில் புகார் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜேந்திரன் கூறுகிறார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.
அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் ராஜேந்திரனை தடுத்து மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.