தமிழ்நாடு

'கஞ்சா புகைத்தபடி ரீல்ஸ் வீடியோ' - போலீஸிடம் வசமாகி சிக்கி எஸ்கேப் ஆன இளைஞர்!

webteam

கிருஷ்ணகிரியில் கஞ்சா புகைத்து வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் இருந்து நள்ளிரவு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கஞ்சா, குட்கா, போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தலை தடுக்கும் வகையில் வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணகிரி நகர போலீசார் பழையபேட்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த கொத்தப்பேட்டா பகுதியைச் சேர்ந்த அசோக் என்கிற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கஞ்சா புகைத்துதிருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போனை சோதனையிட்டனர்.

அதில் அசோக் மற்றும் சிலர் இணைந்து கஞ்சா புகைத்து அதனை விதவிதமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளார். மேலும் போலீசாரை மிரட்டும் வகையில் போலி துப்பாக்கி, கத்தி போன்றவற்றை பயன்படுத்தி வீடியோ பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அசோக்கை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

இதையடுத்து நேற்று இரவு கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் இருந்து அசோக் தப்பி ஓடிவிட்டார் காவல் நிலையத்தில் இருந்து குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

காவலர்களின் அலட்சியத்தால் குற்றவாளி தப்பியோடி விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்