சென்னையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை, நங்கநல்லூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் காவல் ஆணையாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் ரஜினி என்கின்ற அன்புச்செல்வன் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். அதில் தன் பணத்தேவையின் பொருட்டு ஆவடியை சேர்ந்த ரஜினி என்ற அன்புச்செல்வன் என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் ரூபாயை 10% வட்டிக்கு கடன் வாங்கியிருந்ததாக தெரிவித்திருந்தார். கடன் தொகையில் முதல் மாத வட்டி 50,000/- போக, மீதம் 4 லட்சத்து ஐம்பதாயிரம் பெற்று கொண்டு, அதற்கு ஈடாக 20 ரூபாய் முத்திரை தாள் வெற்று பேப்பர்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.
அந்த வெற்றுத் தாள்களில் சுப்ரமணியம் தனக்கு சொந்தமான நங்கநல்லூர், பாலாஜி நகரில் உள்ள வீட்டை எதிரிக்கு குத்தகை விட்டதுபோல் ரஜினி போலியாக ஆவணம் தயார் செய்துள்ளார். வாங்கிய பணத்தை சுப்ரமணியம் வட்டியுடன் 7 லட்சமாக திருப்பி செலுத்திய பிறகும், மேலும் கந்து வட்டியாக ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான் வீட்டை காலி செய்வேன் என அன்புச்செல்வன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்ததில், கந்து வட்டி கேட்டு அன்புசெல்வம் என்பவர் சுப்ரமணியத்தை மிரட்டியது உண்மை என தெரியவந்துள்ளது. இதையடுத்து பழவந்தாங்கல் காவல்துறையினர் அன்பு செல்வத்தை கந்துவட்டி வழக்கில் கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.