கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி இன்று வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யும் மையம் ஒன்றின் மீது மோதியது. இதில் கட்டண வசூல் மையம் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
அத்துடன் முன்னாள் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீதும் லாரி மோதியது. இந்த கோர விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சார்ந்த சென்னப்பன் மற்றும் திருமலை நகரைச் சேர்ந்த பரிமளா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டண வசூல் மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் சிவக்குமாரை கைது செய்துள்ளனர். அதிவேகமாக லாரி ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதா ? அல்லது ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா ? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.