திருச்செந்தூர் முகநூல்
தமிழ்நாடு

கடற்கரையில் ஒதுங்கி கிடந்த சிங்க உடல் சிலை...திடீரென எழுந்து நின்ற லிங்க வடிவம்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்:சுடலைமணி செல்வன்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கி கிடந்த சிங்க உடல் சிலை.. திடீரென எழுந்து நின்ற லிங்க வடிவம்.. வியப்பில் மெய்சிலிர்ந்த பக்தர்கள்.. என்னது நடந்தது பார்க்கலாம்...

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால், கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கோவில் முன்புள்ள கடற்கரையில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், கடல் அரிப்பு ஏற்பட்டு, கோவில் முன்புள்ள படிக்கட்டு வழியாக கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான், கடல் அரிப்பு ஏற்பட்ட இந்த பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான கல் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அந்த கல் பார்ப்பதற்கு சிங்கத்தின் உடல் போலவும், ஆனால், அதன் முகம் வேறு ஒரு உருவத்தின் வடிவிலும் அமைந்துள்ளது.. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைய... மிகவும் பழமையான கோவில்களில் இருக்கும் கல்களில் இதுபோல் சிங்க உடலும் அதில் யாளியின் முகமும் பொறிக்கப்படுவது வழக்கமான ஒன்று என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மேலும் விசாரணை செய்ததில்தான், ஸ்வாரஸ்ய தகவல்கள் பல கிடைத்துள்ளது..

யாளி

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படுவதும், இந்து தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது யானையையும் விட மிகவும் வலிமையானதாக நம்பப்படுகிறது.

முற்காலத்தில் ஏதோ கோவிலில் இந்த கல் சிற்பம் முகப்புகளில் இருந்துள்ளதாகவும், ஒருவேளை திருச்செந்தூர் கோவில் சீரமைப்பு பணியின் போது இந்த கல் அகற்றப்பட்டிருக்கும் என்றும், அப்போது கடற்கரை பகுதியில் மூழ்கிய இந்த கல், கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் கீழே புதைந்து பின் வெளியே வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதை வெளியே எடுத்து பார்த்தபோதுதான், அதன் கீழே ஒரு கல் பாதம் இருந்துள்ளது. உடைக்கப்பட்ட கல்சிலை ஒன்றின் பாதம் மட்டும், கடலில் வீசப்பட்டதால், இது பார்பதற்கு சிவலிங்கம் போலவும் காட்சியளித்துள்ளது.

தொடர்ந்து இதுபோல் ஏராளமான கற்சிலைகள் திருச்செந்தூர் கடற்கரையில் வெளியே தெரிவதால், இதை காணும் பக்தர்கள் மெய்சிலிர்த்து நிற்கின்றனர். மேலும், இதுபோன்ற பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.