தமிழ்நாடு

மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூர கணவன் கைது

மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூர கணவன் கைது

webteam

மனைவியின் தலையை அறுத்து அதனை இருச்சக்கர வாகனத்தில் கணவரே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வேப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முனியப்பன்(28) என்பவருக்கும் கர்நாடக மாநிலம் ஷிமோகா நகரை சேர்ந்த நிவேதா(19) என்ற பெண்னுக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தற்போது வேப்பம்பாளையத்தில் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கம்போல வேலைக்கு சென்ற முனியப்பன் நேற்று சீக்கிரம் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி நிவேதா வேறொரு வாலிபருடன் தவறான உறவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் நிவேதாவிற்கும், முனியப்பனுக்கும் இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. 

முனியப்பன் நிவேதாவை உனது தாய் வீட்டில் விட்டு விடுகிறேன் வா என்று கூறி தனது இருச்சக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். அப்போது பவானி தேசிய நெடுஞ்சாலையில் எருக்காட்டு வலசு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன், வீட்டிலிருந்து கொண்டு வந்த கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். 

இதனிடையே இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் முனியப்பனின் காதும் அறுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து நிவேதாவின் தலையை துண்டித்துள்ளார். மேலும் உடலையும் தலையையும் தனித்தனியே எடுத்து கொண்டு இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகமாக வாகனத்தை திருப்பியபோது அப்பகுதியில் உள்ள வீட்டு சுவரின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். 

இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் சம்பவ இடத்திற்குச் சென்று நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் முனியப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். தனது மனைவியைக் கொன்று தலையை அறுத்து இருச்சக்கர வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்ற கொடூர சம்பவம் பெருந்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.