75 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் மலை அடிவார கிராம மக்கள்  pt
தமிழ்நாடு

’75 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாழும் கிராம மக்கள்..’ முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!

வாணியம்பாடி அருகே 75 ஆண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வரும் கிராம மக்கள் புதிய முதல்வரான விஜய்க்கு கோரிக்கையை வைத்துள்ளனர்.

PT WEB

ஐங்கொல்லை மலை அடிவார கிராம மக்கள் 75 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்வதாகக் கூறி, புதிய முதல்வர் விஜயிடம் தங்களது கிராமத்திற்கு மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். 25 ஏக்கர் பட்டா நிலம் இருந்தும், வனத்துறை அனுமதி இல்லாததால் மின்சாரம் தாமதமாகி வருகிறது. மாணவர்கள் ஆபத்தான வனப்பாதை வழியாக பள்ளிக்கு செல்வதும், தீ விபத்துக்குப் பிறகு கட்டப்பட்ட இந்திரா குடியிருப்பு வீடுகளுக்கும் இதுவரை மின்சாரம் இல்லாததும் மக்கள் வேதனையை அதிகரித்துள்ளது.

செய்தியாளர் - ஆர். இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூர் ஊராட்சி ஐங்கொல்லை மலை அடிவார கிராமம் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அருகிலுள்ள ஜவ்வாது மலைப் பகுதியில் இவர்களது மூதாதையர்கள் வசித்து வந்த நிலையில் இவர்கள் ஆண்டியப்பனுர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வந்து சுமார் 50 ஆண்டு காலத்திற்கு முன்பாக 25 ஏக்கர் மேலாக நிலங்களை வாங்கி இங்கு விவசாயம் செய்து வசித்து வருகின்றனர்.

இங்கு இருக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் வனப்பகுதி வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் 2 ஆறுகளை கடந்து தினந்தோறும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது கிடையாது.

மாணவர்கள் படிப்பதற்காக மகளிர் குழு மூலம் வழங்கப்பட்ட பேட்டரி லைட்டுகள் மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த லைட்டை வைத்து தான் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வில் மாணவன் ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார், மேலும் இப்போது உள்ள மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 1 மணி நேரம் மட்டுமே வரக்கூடிய அந்த பேட்டரி லைட்டை வைத்து படிக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள விவசாய நிலங்களுக்கு டீசல் வைத்து ஆயில் மோட்டரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம், தற்போது டீசல் உயர்வால் விவசாயமும் செய்ய முடியாமல் நாங்கள் பதில் அளித்து வருகிறோம் என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்த நிலையில், கடந்த 2005 - 2006 ஆண்டில் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தந்தும் அதற்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மக்கள் புகார்கள் கொடுத்து வந்த நிலையில், ஊடக வளர்ச்சித் துறை சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சோலார் மின்விளக்குகளை பொருத்தி உள்ளனர். அந்த சோலார் மின்விளக்கும் தற்போது பழுதடைந்து உள்ளதால் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலுக்கு மட்டுமே வரக்கூடிய அரசியல்வாதிகள் வாக்கை பெற்று சென்று விடுகிறார்கள், நாங்கள் சென்று கேட்கும் போது காலம் கடத்தி வருகிறார்களே தவிர எங்களுக்கு எந்த ஒரு தீர்வையும் கிடைக்கச் செய்யவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆண்டியப்பனூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் இடம் கேட்டபோது, ஆண்டியப்பனூர் ஊராட்சி ஐங்கொல்லை பகுதியில் சுமார் 25 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. இவர்கள் மின்சாரம் இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறார்கள், 2 கிலோமீட்டர் தூரம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை கடந்து இந்த பகுதிக்கு செல்வதால் வனத்துறையினர் மத்திய அரசின் அனுமதி பெற்று தான் நாங்கள் வழங்க முடியும் என்று தெரிவித்ததால் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால் கடந்த 2005 - 2006 ஆண்டு அவர்கள் வசித்து வந்த இடத்தில் குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததால், இந்திரா குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு மூலம் 10 வீடுகள் கட்டித் தரப்பட்டது, ஆனாலும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்தசூழலில் தங்களுடைய கிராமத்திற்கு மின்சார வசதி செய்துதரும்படி புதிய முதல்வரான விஜய்க்கு ஐங்கொல்லை மலை அடிவார கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.