தமிழ்நாடு

நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்

நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பட்டதாரி இளைஞர்

webteam

தருமபுரி அருகே இயற்கை முறையில் நாட்டு சர்க்கரை தயாரித்து வருகிறார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.

தருமபுரி மாவட்டம் வானம் பார்த்த பூமியாக விவசாயம் நிறைந்த மாவட்டமாகும்.  இந்த மாவட்ட மக்களின் பிரதான தொழிலே விவசாயம்தான். தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு விவசாயத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி, கடகத்தூர், பழைய தருமபுரி, சவுளூர் உள்ளிட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வந்தன. தற்போது வறட்சி காரணமாகவும், போதிய உற்பத்தி இல்லாததாலும் பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டன. இப்போது 50-க்கும் குறைவான ஆலைகளே செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலைகளும் கர்நாடக மாநிலத்தை நம்பியே இருந்து வருகின்றன. இதனால் வெல்லம் உற்பத்தி குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் வெல்லம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு மாற்றாக, இயற்கையை நோக்கி நகரும் மக்களுக்காகவும், தொழிலை விரிவுப்படுத்தவும்,  இயற்கையான முறையில் ரசாயன கலப்பு இல்லாமல் நாட்டு சர்க்கரையை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதுகலை பட்டதாரி சுகுமார். ஒரு கிலோ நாட்டு சர்க்கரை ரூபாய் 45 க்கு விற்பனை செய்து வருகின்றார்.

இங்கு தயாரிக்கப்படும் இயற்கை முறையிலான நாட்டு சர்க்கரை கர்நாடக, கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் கரும்புகள் கிடைப்பதில்லை. ஆகவே கர்நாடக மாநிலத்திலிருந்து ஒரு டன் கரும்பு  2200 ரூபாய்க்கு வாங்கி வந்து நாட்டு சக்கரை தயாரிக்கின்றனர்.  

ஒரு டன் கரும்புக்கு கூலியாட்கள் செலவு ரூ. 3, 600 செலவிடுவதாகவும் ஒரு டன் கரும்பிலிருந்து 100 கிலோ நாட்டு சர்க்கரை கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார் சுகுமார்.

தகவல்கள் : சே.விவேகானந்தன் - செய்தியாளர்,தருமபுரி