திருநின்றவூரை சேர்ந்த மாணவிக்கு போலி சான்றிதழ் எம்.பி.பி.எஸ் படித்த விவகாரத்தில் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவரது மகள் வைஷ்ணவி, கடந்த 2008ஆம் ஆண்டு பிளஸ்-டு படித்து முடித்தார். அப்போது மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த இவர், தனது இயற்பியல் பாடம் மதிப்பெண்ணை 183க்கு பதில் 186 ஆகவும், வேதியியல் மதிப்பெண்ணை 160க்கு பதில் 190 ஆகவும் மாற்றி போலியான சான்றிதழைக் கொண்டு பதிவு செய்துள்ளார். இதையடுத்து கவுன்சிலிங் மூலம் வேலூரில் மருத்துவக்கல்லூரில் இவருக்கு சீட்டு கிடைத்து படிப்பை தொடர்ந்துள்ளார். அத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு படிப்படையும் முடித்துவிட்டு, தேர்ச்சி அடைந்தும் கல்லூரியைவிட்டு வெளியே வந்துவிட்டார்.
இதற்கிடையே மாணவ-மாணவியரின் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படும் வழக்கமான சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அப்போது வைஷ்ணவியின் சான்றிதழை பரிசோதித்த சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநர், அவரது 12ஆம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து மாணவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவின்போது, அவருக்கு பட்டம் வழங்கப்படவில்லை.
அத்துடன் அவர் பிளஸ்-டு சான்றிதழை திருத்தியது தொடர்பாக வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியை கைது செய்ய முயற்சித்த காவல்துறையினர், உயர்கல்வி இயக்குநனகரம் மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்திற்கு வைஷ்ணவியின் மதிப்பெண் சான்றிதழ்களைக் கேட்டு தபால் அனுப்பியுள்ளனர். இதை அறிந்த வைஷ்ணவி தனக்கு முன்ஜாமீன் வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனையின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது.