தமிழ்நாடு

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு? - மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு? - மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்

webteam

சென்னை பல்லாவரம் அருகே தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்த‌தாகக் குற்றஞ்சாட்டி தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ‌

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை‌ச் சேர்ந்த 21 வயதான நித்யா, இளங்கலைப் ‌பட்டம் பயின்றவர் ஆவார்.‌ இவருக்கு வயிற்றுப்போக்கு, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஊசி செலுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

ஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே இளம்பெண் நித்யா மயக்கமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல‌ப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனையில் இளம்பெண்‌ணை சோதிட்ட மருத்துவ‌ர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு தனியார் மருத்துவம‌னையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணமென அவரின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சு‌ஜாதா கருணாகரன் மீது நட‌வடிக்‌கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.‌

இந்நிலையில், தனியார் மருத்துவமனையின் முன்பு திடீரென மறியலில் ஈடுபட்ட அவர்கள்‌, மருத்துவர் சுஜாதா கருணாகரனைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டை,‌ மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.