தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை

webteam

தரமணி ரயில் நிலையத்தில் காதலனை மிரட்டி காதலியிடம் அத்துமீற முயன்ற இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தரமணி ரயில் நிலையத்தில் காதலர்கள் இருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த லிப்ட் ஆப்பரேட்டர் லூக்காஸ் என்பவர், டிக்கட் கவுண்ட்டருக்கு இருவரையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது டிக்கெட் கவுண்டர் ஊழியர் லோகேஸ்வரன் காதலர் மித்லாஜிடம் விசாரிக்க வேண்டும் எனக் கூறி, டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து காதலியை வெளியே அனுப்பியுள்ளார். பின்னர் டிக்கட் கவுண்ட்டர் ஊழியர் லோகேஸ்வரன் அந்தக் காதலனை விசாரிக்க, வெளியே இருந்த லூக்காஸ் அப்பெண்ணை முதள் தளத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். 

(புகைப்படத்தில் இருப்பவர் லூக்காஸ்)

அங்கே அழைத்துச்சென்றதும் ரூ.5,000 அபராதம் தந்தால் இருவரை விடுவோம், இல்லையென்றால் வழக்குப் பதிவு செய்வோம் என மிரட்டியுள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் திருவான்மியூர் ரயில்வேதுறை காவலர்களிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் லோகேஸ்வரன் மற்றும் லூக்காஸ் ஆகிய இருவரையும் எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதுதொடர்பாக ஆய்வாளர் மீனாட்சி விசாரணை நடத்தி வருகிறார். இதுபோன்று அந்த இருவரும் வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளனரா? அல்லது எந்தப் பெண்ணிடமாவது தவறாக நடந்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.