பெரம்பலூர் அன்னமங்கலம் கிராமத்தில் கியூநெட் பெயரில் ஆன்லைன் முதலீட்டு மோசடி வெடித்துள்ளது. செயின் லிங்க் (MLM) முறையில் அதிக லாபம் தருவதாக ஏமாற்றி, 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரூ.77.60 லட்சம் முதலீடு செய்து இழந்துள்ளனர். 5 ஆண்டுகள் கழித்து ஏமாற்றம் வெளிச்சம் பார்த்ததால், பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
சமீப காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம் கிராமத்தில் கியூநெட் பெயரில் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது இன்று ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்பாளர் அலுவலத்தில் புகார் அளித்தனர்.
புகார் தொடர்பாக மாவட்ட காவல்துறையிடம் விசாரித்த போது, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் அதிகமான மக்கள் ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவனத்தில் ரூபாய் 77.60 லட்சம் முதலீடு செய்து, ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், தொடர்ந்து பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, ஏஜென்டுகள் சிலர், பொதுமக்களிடம் எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய மக்களின் செல்போனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் முதலீடு செய்யும்படி கூறினர்.
அதன்படி அன்னமங்கலத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் என மொத்தம் ரூ.77.60 லட்சம் வரை தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதாவது செயின் லிங்க் முறையில் (MLM) ஒருவர், 2 பேர், 3 பேர் என்று சேர்த்துவிட்டனர். அவ்வாறு ஆட்களை சேர்த்துவிடுபவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலானது என கூறி, போலியான பரிசு பொருட்களை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், பணம் எதுவும் வழங்கவில்லை. ஆனால் அவ்வப்போது, நிறுவனத்தின் சார்பில் நடக்கும் கூட்டத்தில், மக்களை கலந்து கொள்ளும்படி கூறினர்.
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகள் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஏஜென்டுகள், முதலீடு செய்த மக்களுக்கு லாபத்தொகையும் கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் கொடுக்கவில்லை., கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிராம மக்களுக்கு தனியார் நிறுவனம் தங்களை ஏமாற்றியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த ஏஜென்டுகளிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் பணம் செலுத்திய மக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே கிராமத்தை சேர்ந்த ஏஜென்டுகளான வெங்கடேஷன் (41), லட்சுமணன் (39), அழகேசன் (40) ஆகிய 3 பேர் மீது 417, 420 இரு வழக்குகளில் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து இவர்களிடம் கியூநெட் பண மோசடியில் நிறுனத்திற்கும் இவர்களுக்குமான தொடர்பு, வேறு எங்கு எல்லாம் பணம் வசூலித்துள்ளனர், பணத்தை என்ன செய்துள்ளனர், இதில் வேறுயாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இதில் முக்கிய நபரான சுரேஷ் என்பவர் வெளிநாட்டில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விசாரித்தபோது வழக்கு பதிவு செய்யபட்டவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தங்களது பணத்தை மீட்டுத்தர வேதனையுடன் முறையிட்டனர்.