ராமேஸ்வரத்தில் உணவக உரிமையாளர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முத்துச் சாவடி தெருவில் ஷவாயா என்ற தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நம்பு முனிஸ்வரன், நம்புநாதன் ஆகிய இருவர் மது போதையில் உணவு சாப்பிட வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தாமல் உணவகத்தை விட்டு வெளியே செல்லும் போது, உணவகத்தின் உரிமையாளர் சகித் அப்ரிடி பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இருவரும் குடி போதையில் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவருக்கும், உரிமையாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தோர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதியம் நம்பு முனிஸ்வரன், நம்புநாதன் ஆகிய இருவரும் தனது நண்பர்கள் இருளேஸ்வரன், லட்சுமண், தமிழ் அரசன், குமரேசன், நம்பு, கோவிந்தராஜ் ஆகியோருடன் ஆயுதத்துடன் உணவகத்திற்கு சென்று உணவகத்தின் உரிமையாளரை தகாத முறையில் பேசியுள்ளனர். பின்னர் உணவகத்தில் இருந்தவர்கள் மற்றும் சகித் மீது அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் உணவகத்தில் இருந்த பொருட்களை உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
பின்னர் தாக்குதலுக்கு உள்ளான சகித் அப்ரிடியை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் பதிவு செய்துள்ள போலீஸார், அதில் கோவிந்தராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் 7 நபர்களை பிடிக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் வருண்குமார் தனிப்படை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.