liquor reuters
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல்.. எப்போது முதல் அமல்?

இனி டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்கும்போது கூடுதலாகப் பத்து ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதற்காக இந்த 10 ரூபாய்? இந்த 10 ரூபாயை எப்படித் திரும்பப் பெறுவது என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வந்த நிலையில், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக சர்ச்சைகளும் எழுந்தன. இந்நிலையில், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் முக்கிய மாற்றங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதற்கான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.

minister vignesh

இதுவரை மதுபானம் வாங்கும்போது MRP-க்கு மேலாக 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்தது. காலி மது பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை திருப்பி வழங்கப்பட்டது. ஆனால், நவம்பர் 1ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக மதுபானத்தின் MRP விலையிலேயே 10 ரூபாய் சேர்க்கப்படும். இதனால், பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள MRP விலைக்கு மேலாக எந்தத் தொகையையும் வசூலிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறும் ஊழியர்கள் மற்றும் அதைக் கண்காணிக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மதுபாட்டிலிலும் QR Code குறியீடுகள் பயன்படுத்தப்பட உள்ளன. மதுபானம் விற்பனை செய்யும்போது QR குறியீடுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே வாடிக்கையாளரிடம் பாட்டில் வழங்கப்பட வேண்டும். காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது Buy-Back QR Code மீண்டும் ஸ்கேன் செய்யப்படும். அதன்பிறகு, டாஸ்மாக் மத்திய தரவுத்தளத்தில் அந்தப் பாட்டிலின் விற்பனை விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, 10 ரூபாய் வாடிக்கையாளருக்குத் திருப்பி வழங்கப்படும்.

இதில் மற்றொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதாவது, ஒரு டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலைத் தமிழகத்தில் உள்ள வேறு எந்த டாஸ்மாக் கடையிலும் திரும்ப ஒப்படைத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம். ஆனால், QR குறியீடு கிழிந்திருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அந்தப் பாட்டிலை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் 1ஆம் தேதி முதல் பழைய MRP அச்சிடப்பட்ட மதுபாட்டில்களும், புதிய MRP அச்சிடப்பட்ட மதுபாட்டில்களும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இதற்கேற்ப பில்லிங் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய MRP கொண்ட பாட்டில்களுக்கு ரூ.10 கட்டணம் தனியாகக் காட்டப்படும். புதிய MRP கொண்ட பாட்டில்களிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமான ரூ.10 தனியாகக் கணக்கில் காட்டப்பட்டு, மொத்த விலை அச்சிடப்படும். மேலும், இந்தச் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் தொடர்பான அறிவிப்பை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

tasmac

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் விக்னேஷ், மதுபாட்டில்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பே மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது அந்தத் தொகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததுதான் நடைமுறையில் இருந்தது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால், இந்தத் தொகை அரசின் கணக்கில் வராமல் தனிநபர்களின் கைகளிலேயே இருந்து வந்ததாகவும், அந்தப் பணம் முறையாக அரசின் கணக்கில் சேர வேண்டும் என்பதற்காகவே தற்போது புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.