மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்துள்ளன..இந்த மழலையர் பள்ளி கிண்டர் கார்டன் கேர் என்ற பெயரில் வேலைக்கு செல்லும் பெற்றோர் குழந்தைகளை கவனித்து கொள்ளும் மையமாகவும் செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியின் உரிமையாளராக திருநகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவர் உள்ளார்.
மழலையர் பள்ளியில் மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அமுதன் - சிவ ஆனந்தி தம்பதியின் 3 வயது மகளான ஆருத்ரா கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார்.அப்போது சிறுமி பள்ளிக்கு பின்புறம் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அங்கிருந்த ஆசிரியர்கள் சிறுமி ஆருத்ராவை கவனிக்காமல் இருந்துள்ளனர்..பள்ளிக்கு பின்புறம் சென்ற ஆருத்ரா அங்கிருந்த தண்ணீர்தொட்டியில் கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, ஆருத்ராவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து பார்த்த போது, சிறுமி தண்ணீர்த்தொட்டிக்குள் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுமியை மீட்ட ஆசிரியர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின்பு குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துணை ஆணையர் அனிதா பள்ளியின் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். குழந்தை உயிரிழந்த சம்பவம் தீயாக பரவிய நிலையில் பள்ளிக்கு பதறிக்கொண்டு ஓடி வந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் போலீசார் மழலையர் பள்ளி உரிமையாளர் திவ்யா,மற்றும் பள்ளி பணியாளர்கள் 7 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அஜாக்கிரதையாக செயல்பட்ட ஸ்ரீ இளம் மழலையர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
"குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தான் கூறினார்கள். குழந்தை உயிரிழந்ததை கூறவில்லை. பள்ளி தரப்பிலிருந்து தற்போது வரை யாரும் என்னிடம் பேசவில்லை. பார்க்க கூட வரவில்லை. என உயிரிழந்த சிறுமியின் தந்தை அமுதன் வேதனை தெரிவித்தார்..
இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பால் மனம் மாறாத பச்சிளம் சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.