தமிழ்நாடு

அம்பத்தூர் தொழில்பேட்டையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம்

webteam

அம்பத்தூர் தொழில் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் மற்றும் கேஸ் ஏஜென்சியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், ரூ.10 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் விஜயா கெமிக்கல்ஸ் அண்ட் டாய்லெட் ஒர்க்ஸ், எம். ஜெ. வி இந்தியன் கேஸ் ஏஜென்சி மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகத்தை நடத்தி வருகிறார்.  இவர் வழக்கம்போல் நேற்று இரவு 10 மணி அளவில் மேற்படி உள்ள அனைத்து அலுவலகத்தையும் மூடிய பின்பு இரவு செல்வராஜ் என்பவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சுமார் இரண்டு மணி அளவில் நிறுவனத்திற்கு சொந்தமான ரெகார்ட் ரூமில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உடனடியாக அம்பத்தூர் தொழில்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவென்று எரியத் துவங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வாகனங்கள், ஜே ஜே நகர், வில்லிவாக்கம் ஆகிய தீயணைப்பு  வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சிலிண்டர் ஏஜென்சியில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர் உருளைகளை அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பத்தூர் தொழில் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.