மதுரையில் பெற்ற மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை வண்டியூர் அடுத்த நேதாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் வீட்டில் தங்க வைத்தே சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு மனநலம் பாதிக்கப்பட்ட அருண்குமார் அவரது தாய் மற்றும் தந்தையை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை முத்துகுமார் கோடாரியை கொண்டு அருண்குமாரின் தலையில் வெட்டியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தந்தை முத்துகுமார் கைது செய்ப்பட்டுள்ளார்.