தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காவல்துறைக்கு பயந்து ஆட்டோவில் இருந்து குதித்த விவசாயி உயிரிழந்துள்ளார்.
வேலவன் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயிகள் அய்யப்பன், பாண்டி ஆகியோர் உரம் வாங்க சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மணல் கடத்தல் கண்காணிப்பதற்காக காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யப்பன் மற்றும் பாண்டி சென்ற சரக்கு ஆட்டோ மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனவே போலீசைக் கண்ட விவசாயிகள் பயந்துபோய், அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அய்யப்பன் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பாண்டி சிகிச்சை பெற்று வருகிறார். சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் சேர்மராஜ் என்பவரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அய்யப்பன் உயிரிழந்ததற்கு காவல்துறையே காரணம் என்று, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.