திருவாரூரில் வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து வீட்டு உரிமையாளர்களுக்கு விஷம் கொடுத்து கொன்று 6 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.
திருவாரூர் அருகே விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் சாக்குக்கடை நடத்திவருகிறார். 2 மகள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணமான நிலையில், செல்வம், சகுந்தலா தம்பதி தனியே வசித்து வருகிறார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு கேட்க வந்த தம்பதி, தொடர்ச்சியாக ஓரிரு நாட்கள் வந்து இருவரிடமும் பழகியதுடன் வாடகை முன்பணமாக 1500 ரூபாயை தந்தனர்.
அப்போது, தான் மூட்டுவலியால் அவதிப்படுவதாக வாடகை கேட்டு வந்த தம்பதியிடம் சகுந்தலா தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்றிரவு தம்பதியினருடன் வந்த மற்றொரு நபர், தாம் ஒரு நாட்டு வைத்தியர் என்றும், மூட்டுவலிக்கு மருந்து தருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் சகுந்தலாவுக்கும், செல்வத்துக்கும் மருந்து எனக்கூறி விஷம் கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.
மருந்து என நினைத்து விஷத்தை குடித்து இருவரும் மயங்கி விழுந்த நிலையில், சகுந்தலாவின் கழுத்தில் இருந்து 6 சவரன் தங்கச்சங்கிலியை அந்த நபர்கள் இருவரும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். மயக்கம் தெளிந்து வந்த செல்வம், சகுந்தலா உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் கொண்டு சேர்ந்ததனர்.