சென்னையில் வித்தியாசமாக நடைபெற்ற மாரத்தான் போட்டி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.
உடல் உறுதியையும், மன வலிமையையும் ஊக்கப்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சற்று வித்தியாசமாக மூளைக்கும் வேலை தரும் வகையில் சென்னையில் ஒரு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டி சென்னை ரன்னர் மற்றும் முகப்பேர் ஃபிட்னஸ் சர்க்கிள் சார்பில் நடைபெற்றது.
முகப்பேரில் உள்ள சிந்தி உயர்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பங்கு பெற்றவர்கள் முதலில் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதில் 4 பேர் ஓடுபவர்கள். ஒருவர் சைக்கிள் ஓட்டுபவர். அவர்களுக்கு துடுப்புச் சீட்டுகள் கொடுக்கப்பட்டது.
சைக்கிளில் செல்பவர் முதலில் இலக்கை அடைந்து, மீதமுள்ள நான்கு பேருக்கு பின்னர் தகவல் கொடுக்கிறார். அந்த தகவலின் படி மீதமுள்ளவர்கள் இலக்கை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் துடுப்புச்சீட்டுகளில் உள்ள இடங்களை, ஓட்டத்திற்கு நடுவே கண்டுபிடித்து அங்கு செல்ஃபி எடுத்த பின்னர் இலக்கை அடையவேண்டும் என்பது விதியாக இருந்தது. இவ்வாறு வித்தியாசமாக நடைபெற்ற மாரத்தான் போட்டி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது.