100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 40 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என்றும், மீதத் தொகையை வசூலிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 100 சதவீத கல்விக் கட்டணம் வசூல் செய்வதாக 101 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது எனவும் இதில் 9 பள்ளிகள் மீது மட்டுமே உண்மைத்தன்மை உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் மற்ற பள்ளிகள் மீது குறித்த புகார்களில் உண்மைத்தன்மை இல்லை எனவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மேலும், செப்.30க்கு மேல் 40 சதவீத கட்டணத்தை வசூலிக்க கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனவும் தெரிவித்தார். இந்த புகார்கள் குறித்து 9 பள்ளிகளும் அக்டோபர் 14ம் தேதி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் குறித்து புகார் அளிக்க பெற்றோர் தயங்குவார்கள் எனவும் எனவே மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அதில் வரும் புகார்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஎஸ்சிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஒன்பது பள்ளிகள்
1) PSBB மில்லேனியம் பள்ளி, கோவை
2) சிதம்பர நாடார் மேல்நிலை பள்ளி, விருதுநகர்
3) சத்திரிய வித்யாலயா பள்ளிகள், விருதுநகர் - 2 பள்ளிகள்
4) இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்
5) டாப் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி
6) SHNV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகாசி
7) ஸ்ரீ சங்கரா வித்யா கேந்திரிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர்
8) உசேன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூர்