தமிழிசை சௌந்தரராஜன் PT
தமிழ்நாடு

கோமியம் குறித்து உண்மைக்கு மாறான கருத்து.. தமிழிசை மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

பசு கோமியம் குறித்து நிரூபிக்கப்படாத தகவல்களை கூறிவரும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த பல்மருத்துவர் ஒருவர் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார்.

PT WEB

பசு கோமியம் குடிப்பதால் 80 வகையான நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது, கோமியம் ஒரு அமிர்த நீர் என மாட்டு கோமியம் ஒரு மருந்தாக பயன்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சுகுமார் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத கருத்துகளை பரப்புகிறார்..

தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனுவில், சமூகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன், பசு கோமியம் குறித்து விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாத உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார்.

துல்லியமற்ற தகவல்களை பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், மக்களின் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து எந்த அக்கறையும் இன்றி, பொழுதுபோக்காக ஒரு தகவல்களை பரப்புவதன் மூலம் கடும் பின் விளைவுகள் ஏற்படுத்தும் என்பதால், தமிழிசை சௌந்தர்ராஜன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.