திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் web
தமிழ்நாடு

திருச்சி | அரசு மருத்துவமனையில் பணியாளர் சீருடை அணிந்து குழந்தை திருட்டு!

திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் சீருடை அணிந்திருந்த பெண் தாயிடம் தடுப்பூசி போட்டுவருவதாக பேசி குழந்தையை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rishan Vengai

திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாளர் சீருடையில் வந்த பெண், சுகன்யாவின் குழந்தையை தடுப்பூசி போட வேண்டும் என்று கூறி திருடிச் சென்றார். சிசிடிவி பதிவுகள் மூலம் குழந்தை ஆட்டோவில் கடத்தப்பட்டதை கண்ட காவல்துறை, 5 மணி நேரத்தில் குழந்தையை மீட்டு, குற்றவாளியை கைது செய்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வீர மச்சான் பட்டி ஊராட்சியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்லி மருத்துவமனை பணியாளர் சீருடை அணிந்த  பெண் ஒருவர் தாயிடமிருந்து ஆண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் குழந்தை திரும்ப வராததால் அந்த பெண் மற்றும் உறவினர்கள் இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒன்றில் அந்த குழந்தையை அந்த மர்ம பெண் தூக்கிக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.

இந்நிகழ்வு அரச மருத்துவமனையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

குழந்தை மீட்பு..

குழந்தை திருடுபோன விசயத்தில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குழந்தையை திருடி சென்ற பெண் குறித்து விவரம் கிடைத்துள்ளதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டு விடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்தசூழலில் குற்றம் செய்த பெண்ணை 5 மணி நேரத்தில் தேடிப்பிடித்த காவல்துறை, திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை சேலம் தம்மம்பட்டியில் மீட்டனர். காவல்துறையினரிடம் சிக்கிய மீனாட்சி என்ற பெண், குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்துச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.