தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

webteam

திம்பம் மலைப்பாதை 19 ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திம்பம் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த கார் 19வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்ட காரில் இருந்த பயணிகள் உடனடியாக காரை விட்டு இறங்கி ஓடி உயிர் தப்பினர். கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக ஆசனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் சேதம்டைந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.