தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி - அவசரமாக மூடப்பட்ட ‘ஆழ்துளைக் கிணறு’

webteam

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணறு ஒன்று புதிய தலைமுறை செய்தி சேகரிப்பின்போது அவசரமாக மூடப்பட்டது.

லட்சக் கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் வந்து செல்லும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அடி அண்ணாமலை கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் மக்கள் நடந்து செல்லும் பாதையின் ஓரத்திலேயே ஆழ்துளைக் கிணறு ஒன்று திறந்தபடியே கிடந்தது. இதுதொடர்பாக புதிய தலைமுறை சார்பில் செய்தி சேகரிக்கப்பட்டது. வீடியோ எடுக்கப்படும் போது, அவசர அவசரமாக அதிகாரிகளும், கிராமத்து ஊராட்சி செயலாளரும் இரும்பு தகட்டை பொருத்தி கிணற்றை மூடினார்கள். இவ்வளவு காலமாக அந்த ஆழ்துளைக் கிணறு திறந்தபடியே இருந்துள்ளது.

நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள ஆழ்துளைக் கிணறு ஒன்றி குழந்தை விழுந்து அதை மீட்கப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு இடங்களிலும், பொது இடங்களிலும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த உபயோகத்திற்கு தோண்டிய அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் பாதுகாப்பாக மூடி வைத்துவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். 

ஆழ்துளைக் கிணறு மூடாமல் திறந்து இருந்தால், அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.