தமிழ்நாடு

மலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை

மலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை

kaleelrahman

மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண் குழந்தை சுகப்பிரசவமானது. ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும், மருத்துவ உதவியாளரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

சத்தியமங்கலம் அடுத்த கோட்டமாளம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி லட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் கர்ப்பிணி லட்சுமியை ஏற்றிக்கொண்டு கோட்டமாளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, திம்பம் மலைப்பாதை 16 வளைவின் அருகே சென்றுகொண்டிருந்தபோது பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில், லட்சுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து குழந்தையுடன் லட்சுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும், குழந்தையையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தை பிறந்ததால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். மலைப்பாதையில் ஆம்புலன்ஸ்லேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் அஜித்குமார், ஓட்டுநர் சங்கர் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.