போரூர் அருகே தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டவர் விபத்தில் பலியானர்.
சென்னை வில்லிவாக்கம் திருவேங்கட அய்யர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று மோட்டார் சைக்கிளில் இருந்து பிரபாகரன் தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி அவரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது நண்பர்கள் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்து போனார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உடன் இருந்த நண்பர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிரபாகரன் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்தில் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்த பிரபாகரன், ரேஸ் ஆட்டோக்களை தயார் செய்தும் வந்துள்ளார். நேற்று அதிகாலை போரூர் டோல்கேட்டில் இருந்து தாம்பரம் வரை தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ரேசில் ஈடுபட்டன. இதனை கண்காணிக்க 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில், ஆட்டோ ஓட்டுனர்கள் வந்துள்ளனர்.
அவற்றில் ஒரு ரேஸ் ஆட்டோவை பிரபாகரனும் ஓட்டி வந்துள்ளார். தாம்பரம் பைபாஸ் தரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பிரபாகரனின் ஆட்டோ மோதியுள்ளது. இதில் ஆட்டோவின் முன்பகுதி நசுங்கி பிரபாகரனுக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டோ ரேஸில் ஈடுபட்டு விபத்து ஏற்பட்டது தெரியக்கூடாது என்பதற்காக, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்” என்று கூறினர்.
இதையடுத்து பிரபாகரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தாம்பரம் - புழல் பைபாஸ் சாலையில் அதிகாலை நேரங்களில் ஆட்டோ ரேஸ் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இதனை போக்குவரத்து போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.