தமிழ்நாடு

கொரோனா தொற்றால் கிருஷ்ணகிரியின் 24 வயது, ராமநாதபுரத்தின் 27 வயது இளைஞர்கள் உயிரிழப்பு

kaleelrahman

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 15,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் 77 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 46 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 31 பேரும் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 24 வயது இளைஞர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் உயிரிழந்தனர். இணை நோயுடன் இருந்த கோவையைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கொரோனா பாதிப்பால் பலியானார். இணை நோய் இல்லாத 14 பேர் உயிரிழந்துள்ளனர். இணை நோய்கள் இல்லாத திருப்பூரை சேர்ந்த 30 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 12 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 830 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 561 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5ஆம் நாளாக 12 வயதுக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 640 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 181 பேரும், கோவை மாவட்டத்தில் 996 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 717 பேரும், நெல்லை 680, மதுரை மாவட்டத்தில் 539 பேரும்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.