தமிழ்நாடு

17 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி விபத்து – நடைபயிற்சி சென்ற நபர் உயிரிழப்பு

webteam

மாங்காடு அருகே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த லோடு ஆட்டோ மோதிய விபத்தில் நடை பயிற்சி சென்றவர் உயிரிழந்த நிலையில், வாகனத்தை ஓட்ட அனுமதித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். (55), இவர், இன்று மவுலிவாக்கம் பகுதியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அன்பழகன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்தனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அன்பழகன் உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுவனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவருக்கு 17 வயது என்பது தெரியவந்தது. இதையடுத்து 18 வயது பூர்த்தியடையாமல் வாகனத்தை இயக்க வைத்த வாகன உரிமையாளர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (41), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் 17 வயது சிறுவன் ஓட்டி வந்த வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.