ஸ்டைலாக முடிவெட்டிக் கொள்ள தாய் அனுமதிக்காததால் விரக்தியடைந்த 12ஆம் வகுப்பு மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனா. இவரது மகன் சீனிவாசன். இவர் குன்றத்தூரில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்த அவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்று வந்த தாய் மோகனா, மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரின் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வளசரவாக்கம் போலீசார் சீனிவாசன் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதிகமாக முடி வளர்த்திருந்த சீனிவாசன், தான் ஸ்டைலாக முடிவெட்டவுள்ளதாக மோகனாவிடம் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தாய் மோகனா, சீனிவாசனை சலூன் கடைக்கு அழைத்துச் சென்று அவர் விருப்பபடி முடி வெட்ட வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சீனிவாசனை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மோகனா வேலைக்குச் சென்றுவிட்டார். தன் விருப்பப்படி முடி வெட்ட முடியாததால் மன உளைச்சலடைந்த சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.