தமிழ்நாடு

வேலூர்: தந்தை உயிரிழப்பால் நிர்க்கதியான குடும்பம்; காய்கறிக் கடை நடத்தும் 13 வயது சிறுவன்

வேலூர்: தந்தை உயிரிழப்பால் நிர்க்கதியான குடும்பம்; காய்கறிக் கடை நடத்தும் 13 வயது சிறுவன்

JustinDurai

கொரோனா அறிகுறிகளுடன் தந்தை இறந்த நிலையில், 13 வயதில் குடும்பச் சுமையை ஏற்று நடத்த, அப்பாவின் காய்கறி கடையை நடத்தி வருகிறான் ஒரு சிறுவன். 

13 வயது சிறுவனுக்கான கனவுகள் எத்தனை எத்தனை இருக்கும். நண்பர்களுடன் ஓடி விளையாட ஆசை இருக்கும். படிப்பதற்கான கனவுகள் இருக்கும். ஆனால், 13 வயது யஷ்வந்த், அதிகாலை மூன்று மணிக்கு காய்கறிகளை வாங்கி வந்து, தனது அப்பா நடத்தி வந்த கடையை நடத்தி வருகிறான்.

வேலூர் பலவன்சாத்து பகுதியை சேர்ந்த ஜெயசீலன், கொரோனா அறிகுறிகளுடன் கடந்த மே மாதம் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 13-ம் தேதி உயிரிழந்தார். தந்தை ஜெயசீலனின் திடீர் மறைவு, அடிக்கடி மயக்கம் வரும் நோயாளி தாய், 10 வது படிக்கும் அக்கா ஜனனி, என குடும்பம் நிர்க்கதியான நிலையில், தந்தையின் காய்கறி கடையை எடுத்து நடத்தத் தொடங்கியிருக்கிறான் யஷ்வந்த்

யஷ்வந்த்துக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்பது கனவு.  சகோதரி ஜனனிக்கோ டாக்டர் ஆக வேண்டும் என்பது விருப்பம். காய்கறி கடை நடத்துவதன் இடைவேளையில் வீட்டுக்குச்சென்று படிக்கும் யஷ்வந்த், பள்ளி திறந்துவிட்டால் காலை 8 மணிவரைதான் கடை நடத்த முடியும் என்றும், பள்ளி திறந்துவிட்டால் கடை நடத்தாமல் வருவாய் இன்றி குடும்பத்தை காப்பாற்ற என்ன செய்வது என்றும் இப்போதே கலக்கத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.

படிப்பில் பல பரிசுகளை பெற்றவர்களான யஷ்வந்த், ஜனனி இருவரும் தங்கள் படிப்பை தொடர முடியுமா? இனிவரும் காலங்களில் பசியின்றி நாட்களை நடத்த முடியுமா என்ற கேள்வியுடன் நிற்கிறார்கள்.