தமிழ்நாடு

118 ஆண்டு பழமையான கட்டிடம் துணை கமிஷனர் அலுவலகமாக மாற்றம்!

118 ஆண்டு பழமையான கட்டிடம் துணை கமிஷனர் அலுவலகமாக மாற்றம்!

JustinDurai
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை காவல் ஆணையாளராக இருந்த ஓஸ்வெல்டு ரூத் ஜோன்ஸ், 1902-ம் ஆண்டு தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடத்தை காவல்துறையின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
 
தற்போது இக்கட்டடத்தில், குற்றப்பிரிவு, தடய அறிவியல், விபாச்சார தடுப்பு பிரிவுகள் செயல்பட்டன. அதன்பின், இக்கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்தது.
 
118 ஆண்டு பழமையான இக்கட்டிடம் தற்போது திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று திறந்து வைத்தார். அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சென்னை போலீசார் வசம் உள்ள பாரம்பரியமிக்க, பழமையான கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, போலீசாரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை காவல் அருங்காட்சியமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.அதில், போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், அரிய வகை பொருட்கள், போலீசாரின் வீர தீர செயலுக்கான ஆவணங்கள், மறக்க முடியாத நிகழ்வுகளின் படங்கள் என ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன’’ என்றார்.