எடப்பாடியில் மாணவன் உயிரிழப்பு pt
தமிழ்நாடு

எடப்பாடி | பள்ளி பேருந்தில் சீட் பிடிப்பதில் மோதல்.. 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - நடந்தது என்ன?

எடப்பாடி அருகே தனியார் பள்ளி மாணவர்களுக்கிடையே பள்ளி வாகனத்தில் இடம் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், படுகாயம் அடைந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெருவில் செயல்பட்டு வரும் விஸ்டம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,  வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வாகனத்தில் வரும்போது மாணவர்களிடையே அமர்வதற்கு இடம் பிடிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் கந்தகுருவுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரை எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை வழங்கிய நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவன் பரிதாபமாக மரணம்..

சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் கந்தகுரு, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இத்தகவலை அறிந்த எடப்பாடி போலீசார் தனியார் பள்ளிக்கு அசம்பாவிதம் நிகழாவண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.