தமிழ்நாடு

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு பரவும் டெங்கு: நாகர்கோவிலில் மாணவன் பலி

webteam

நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சந்தோஷ் என்ற 9 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவி வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் மாவட்ட நிர்வாகம்‌ போர்கால ‌ந‌‌டவடிக்கை எடுத்து காய்ச்சல் பாதிப்பு பரவுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேராளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அந்த மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்துள்ள நிலையில், குமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்து தினங்களாக சிகிட்சை பெற்று வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் முன்பு போர் கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.