தமிழ்நாடு

தமிழகத்தில் சதவித மகளிரிடம் வங்கிக் கணக்கு இருக்கிறது? - மலைக்க வைக்கும் புள்ளி விவரம்

கலிலுல்லா

வங்கிக் கணக்கு வைத்துள்ள மகளிர் எண்ணிக்கையில் 92 சதவிகிதத்துடன் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

நாடு முழுவதும் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட, வங்கிக் கணக்கு வைத்துள்ள மகளிர் குறித்த அறிக்கையை தேசிய குடும்ப நல ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள பெண்களில் 93 சதவிகிதம் பேர் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. புதுச்சேரி தவிர்த்த பெரிய மாநிலங்களில் தமிழகம் 92 சதவிகிதத்துடன் முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடத்தை 89 சதவிகிதத்துடன் கர்நாடகா பிடித்துள்ளது. லடாக் 88 சதவிகிதம், ஒடிசா 87 சதவிகிதம், காஷ்மீர் 85 சதவிகிதம் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. குறைந்த அளவாக நாகாலாந்தில் 64 சதவிகித மகளிருக்கு மட்டுமே வங்கிக் கணக்குகள் உள்ளன.

பெரிய மாநிலங்களில் மகாராஷ்டிரா 73 சதவிகிதம் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் தலா 75 சதவிகிதம் மேற்கு வங்கத்தில் 77 சதவிகிதம் பெண்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர். மகளிருக்கு நிதிச் சுதந்திரம் அளிப்பதை நோக்கிய அரசின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருவதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும், தமிழகம் முன்னிலை வகிக்கும் நிலையில், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் கூடுதல் கவனம் செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.