தமிழ் பாடத்தில் 9 பேர் தோல்வி pt
தமிழ்நாடு

மதுரை| தமிழாசிரியர் இல்லை... ஒரே பள்ளியில் 9 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த சாதனைச் செய்திகளுக்கு மத்தியில் வேதனைச் செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒன்பது மாணவர்கள், தமிழ் மொழிப்பாடத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.

PT WEB

தும்மக்குண்டு கள்ளர் மேனிலைப் பள்ளியில் 45 பேர் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். வெளியான தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர் தோல்வியுற்றனர். இதற்கு காரணம் அந்த பள்ளியில் ஓராண்டாக தமிழாசிரியர் இல்லை என்பதே.

மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கு தமிழாசிரியர் பணி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்த இடம் காலியாகவே உள்ளது. இதன் விளைவாக மாணவர்களுக்கு சரியாக வகுப்புகள் நடைபெறாத நிலையால் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊர்மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

இப்பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர், கள்ளர் பள்ளி இணை இயக்குநர் அலுவலகத்தில் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால், பல நாட்கள் அந்த அலுவலகம் சென்றுவிடுவதால் கண்காணிப்பு இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் பதில்..

தமிழ்நாட்டில் சிறந்த கல்வி வழங்கப்பட்டாலும், இதுபோன்று ஆங்காங்கே நீடிக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது, 'தற்போது தான் இதுதொடர்பாக தகவல் வந்துள்ளது. தமிழ் ஆசிரியர் ஏன் பணியமர்த்தப்படவில்லை என்பது குறித்து விரிவாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவித்தார்.