மதுரை அரசு மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணி பெண் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவியான அம்பிகா (24) 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அம்பிகா, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பன்றிக் காய்ச்சலுக்கான தனி வார்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அம்பிகா உயிரிழந்தார். அவர் உயிரிழந்த உடனே மருத்துவர்கள் கர்ப்பிணியின் 9 மாத சிசுவை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அம்பிகாவின் கணவர் சரவணன் மற்றும் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.