தூத்துக்குடி அருகே ரவுடியால் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறையினரே நிதி திரட்டி ரூ.86.5 லட்சம் வழங்கியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக நிதியுதவி வழங்க மதுரை தென் மண்டல ஐ.ஜி முருகனின் அறிவுறுத்தல்படி, தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நிதியுதவி பங்களிப்பு செய்துள்ளனர்.
அந்த பங்களிப்பு 86,50,000 ரூபாயை நேற்று மதுரை தென் மண்டல ஐ.ஜி முருகன், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டார விளையில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் திருநெல்வேலி டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென் மண்டல ஐ.ஜி முருகன் கூறுகையில், ''சுப்பிரமணியன் மறைந்தாலும் அவரது வீரத்தை தமிழக காவல்துறை வரலாறு என்றென்றைக்கும் சொல்லிக்கொண்டே இருக்கும். அவரை இழந்த குடும்பத்திற்கு காவல்துறை சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.